வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அடியேன் தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்.
அடியேனுக்கு சில சந்தேகங்கள் வெகு நாட்களாக இருந்து வருகிறது. கருணை கூர்ந்து இவற்றை தீர்த்து வைக்க பிரார்த்திக்கிறேன். இவற்றிற்கு பதில்களை என் பணி பதிவுகள் முழுவதும் தேடியும் கிடைக்காததால் இங்கு விண்ணப்பிக்கிறேன். இவற்றிற்கு வேறு இடத்தில் முன்னமே பதில் இருந்தால், தயவு செய்து அவ்விடங்களை குறிப்பிடப் பிரார்த்திக்கிறேன். இல்லையென்றால், இச்சந்தேகங்களை என் பணியிலோ, வேறு முறையிலோ தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.
1. நம்முடைய சனாதன தர்மத்தில் அஹிம்சை வெகுவாக போற்றப்படுகிறது. ஆனால் அதே சமயம் ரிஷிகளும், யதிகளும் மான் தோலை தாங்கள் அமர்வதற்கு உபயோகப் படுத்துவது ஒப்பு கொள்ளப் படுகிறது. இதன் மூலம் மான்களை, அவற்றின் தோலுக்காக வதை செய்யப்படுவது ஒப்பு கொள்ளப் படுவது போல் காணப்படுகிறது. இது ஏன் ?
2. மூன்று வகை ஆத்மாக்களை பற்றி கேள்விப்படுகிறோம் – பத்தாத்மா, முக்தாத்மா, நித்யாத்மா என்று. பத்தாத்மாக்கள் சம்சாரத்தில் கிடப்பவர்கள் என்றும், முக்தாத்மாக்கள் சம்சாரத்தில் இருந்து பின் விடு பட்டவர்கள் என்றும், நித்யாத்மாக்கள் சம்சார சம்பந்தமே இல்லாதவர்கள் என்றும். ஆனால் ஆஞ்சநேய ஸ்வாமியோ வைகுந்தமே வேண்டாம் என்று ராம நாமத்தை ஜபித்துக்கொண்டு ராம கதையை கேட்டுக்கொண்டு இந்த உலகிலேயே இருக்கிறவர். இதனால் அவரை பத்தாத்மா என்று கூறுவதா அல்லது முக்தாத்மா என்று சொல்வதா ?
3. நாம் உண்ணும் உணவை பகவானுக்கு கண்டருளச்செய்து பிறகு உண்ணுவதன் மூலம் அவ்வுணவில் இருக்க கூடிய அனைத்து ரஜோ-தமோ குணங்களோ வேறு தோஷங்களோ நீக்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். அப்படியிருக்க, பரிசேஷணம் என்பதன் பயன் என்ன ? அதுவும் ஆண்களுக்கு மட்டும் என்று ஏன் விதிக்கப்படுகிறது ? அதுவும் அரிசிச்சோறுக்கு மட்டும் என்று ஏன் சொல்லப்படுகிறது ? பெருமானுக்கே சமர்ப்பித்த பின் இன்னும் வேறு செய்ய வேண்டிய தேவை தான் என்ன ?
4. அதிதியை நம் தர்மத்தில் மிகவும் மேலான இடத்தில் வைத்து போற்றுகிறோம். ஆனால் இங்கே யார் அதிதி எனப்படுகிறார் என்பதில் ஏதாவது விதி முறைகள் உள்ளனவா ? நம் கிரஹத்துக்கு வரும் யாவரும் அதிதி ஸ்தானத்தில் ஆகி விடுகிறார்களா ? பக்தர்கள், பக்தர் அல்லாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், நம் ஸம்ப்ரதாயத்தவர்கள், அல்லாதவர்கள், இது போன்ற இன்னும் பலப்பல பாகுபாடுகள் எதுவும் பார்க்கலாமா, பார்க்கக் கூடாதா ? எல்லா வகை அதிதிகளையும் ஒரே மாதிரி தான் உபசரிக்க வேண்டுமா அல்லது பக்தர்கள் போன்றவர்களை வேறு மாதிரி உபசரிக்க வேண்டுமா ?
கேள்விகளில் பிழை இருந்தால் பொறுத்து அருள வேண்டுகிறேன்.
அடியேன் வேங்கடகிருஷ்ணன்.