What we have(own)to offer to Bhaghawan that HE doesn’t have or own??

Updated on June 6, 2018 in General
0 on June 6, 2018

Forwarding as recd…

கடவுளுக்கு இதை கொடுத்தேன், அதைக் கொடுத்தேன் என்பதே தவறான ஒன்றுதான்.

இந்த உலகத்தையும், அதனுள் வசிக்கும் உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் படைத்தவன் அவன்.

அனைத்தும் அவனுக்கே சொந்தமானது.

அப்படிப்பட்டவனுக்கு, அவன் படைத்த மனிதப் பிறவியான நம்மால் என்ன கொடுக்க முடியும்?.

ஆனால் இறைவனிடம் இல்லாத ஒன்றை கண்டறிந்து அதை இறைவனுக்கு அளிக்க முன்வந்துள்ளார், கம்பர்.

‘இது என்ன மடமை’ என்று எண்ணுகிறீர்களா?.

அப்படி கடவுளிடம் எதுதான் இல்லை..

கம்பர் எதைத்தான் இறைவனுக்கு அளித்தார் என்பதைப் பார்க்கலாம்.

‘நாராயணாயநம என்னும்நன்னெஞ்சர்

பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்

காராரு மேனிக் கருணா கரமூர்த்திக்கு

ஆரா தனைகள் அறியாமை ஒன்றுமே’

கம்பரின் இந்த கவிநயம் மிகுந்த பாடலில்தான் அதற்கான பதில் ஒளிந்துள்ளது.

அதனால் இந்த பாடல் காட்டும் பாதையின் வழியே சென்று நாம் அறிந்து கொள்வோம்.

கவியில் சிறந்த கம்பருக்கு, தான் தினமும் வழிபாடு செய்யும் நாராயணருக்கு ஏதாவது ஒன்றை காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது.

அதன் ஊடே எதை இறைவனுக்குக் கொடுப்பது என்ற சிந்தனையும் தோன்றி அவரை அலைக்கழித்தது.

ஒருவருக்கு தன்னிடம் இருக்கின்ற பொருளின் மீது விருப்பம் ஏற்படாது.

அவரிடம் உள்ள பொருளையே நாம் மீண்டும் கொடுத்தால், ‘ஏற்கனவே நம்மிடம் இருப்பதுதானே’ என்ற சலிப்பு ஏற்படும்.

அவரிடம் இல்லாத பொருளை கொடுத்தால் தான் அவர் அதனை பிரியமாக ஏற்றுக்கொள்வார்.

இது உலக இயற்கை, இதனை மறுப்பதற்கில்லை.

ஏற்கனவே பொற்காசுகள் கொட்டிக்கிடக்கும் தனவந்தரிடம், ஒரே ஒரு பொன் காசை கொடுத்தால் அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பாரா என்ன?.

அதே போல் ஊரையே தனக்கு சொந்தமாக வைத்திருப்பவரிடம் சென்று, சிறிய இடம் ஒன்றை கொடுத்தால், அதனால் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு விடுமா?.

இறைவனிடம் இல்லாத ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கம்பர் எண்ணியதில் வியப்பேதும் இல்லை.

‘உயர்தர பசுக்களிடம் கறந்த ஒரு குடம் பாலால் நிவேதனம் செய்தால் மகாவிஷ்ணு மகிழ்வாரா?. அது எப்படி மகிழ்வார்?

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவர், நாம் தரும் ஒரு குடம் பாலை விரும்பமாட்டார்.

பூலோகத்தில் எப்போதும் மதிப்பேறிச் செல்லும் நிலத்தில் கொஞ்சத்தை, நாராயணருக்கு தானம் செய்யலாமா?.

அதுவும் முடியாது. ஏனெனில் பூமித் தாயான நிலமகளின் நாயகன் அவர்.

நம்மிடம் உள்ள ஆபரணங்களில் சிலவற்றை சேர்த்து பெரிய மாலையாக்கி, அந்த மாதவனுக்கு சாத்தினால் என்ன?.

இதிலும் மகிழ்வுற மாட்டார். செல்வத்திற்கு அதிபதியான திருமகளே, திரு மாலின் நெஞ்சில்தானே குடியிருக்கிறாள்.

சரி.. நல்ல பட்டு வேட்டி வாங்கித் தரலாம் என்றால், அவரோ உயர்தர பட்டாடை உடுத்தும் பீதாம்பரதாரி.

தீய சக்திகளை அழிக்க வில்லும், அம்பும் செய்து தரலாம் என்றால், பஞ்சாயுதபாணியாக திகழும் அவரது கையிலோ ஆயுதங்களில் சிறந்த சுதர்சண சக்கரம் இருக்கிறது.

பிறகு என்னதான் என் இறைவனுக்கு நான் காணிக்கையாக கொடுப்பது’ என்று நீண்ட நேரமாக சிந்தித்தார் கம்பர்.

திடீர் என்று அவருக்கு ஒருயோசனைதோன்றியது. துள்ளிக்குதித்தார், கூத்தாடினார், அகமகிழ்ந்தார்.

‘ஆம்! அதுதான் சரியானது. அதைத்தான் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஒன்று தான் இறைவனிடம் இல்லை. ஆனால் என்னிடம் அது ஏராளமாக குவிந்து கிடக்கிறதே’ என்று நினைத்து மகிழ்வடைந்தார்.

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்னதான் கம்பரிடம் இருந்தது.

அவரே கூறுகிறார்.

‘நாராயணா! என் இறைவா! உன்னிடம் ஒரு துளிகூட இல்லாதது அஞ்ஞானம். அது என்னிடம் மலைபோல் இருக்கிறது.

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கருணையின் கடலே! என்னிடம் உள்ள அறியாமையை உனக்கு காணிக்கையாக அர்ப்பணம் செய்கிறேன். அதனை ஏற்றுக்கொள்!’ என்றார்.

நம்மிடம் மிதமிஞ்சி இருக்கும் அறியாமையை நாம் இறைவனிடம் சமர்ப்பித்தால், தன்னிடம் உள்ள அனைத்து செல்வங்களையும் இறைவன் நமக்குத் தந்தருள்வார்.

Adiyean Ramanujadhasan srinvasan.

 
  • Liked by
Reply